ஏகலைவன்(வேட்டுவர் அரசன்)
- Posted on Sun Feb 4, 2024
- 2213 Views
#ஏகலைவன்(வேட்டுவர் அரசன்)
நிஷாத வம்சத்தில் (#நிஷாதர் = #வேடர்(வேட்டுவர்)) ஹிரண்யதனுஷ் என்பவரின் மகனாகப் பிறந்தான் #ஏகலைவன். ஆதிவாசியான ஏகலைவனுக்குத் தந்தை வேட்டையாடுவதைப் பார்க்கச் சிறுவயதிலேயே ஆர்வம் அதிகம். தந்தை வில்லை வளைத்து , அம்பெய்வதை மிகவும் ஆர்வமாகக் கவனிப்பான். அதைக் குறித்து அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்பான் ஏகலைவன். ஹிரண்யதனுஷும் மகனுக்கு வில்வித்தையின் மீது இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, அவனுக்கு வில்வித்தையின் அடிப்படையைக் கற்றுக் கொடுத்தார்.
ஏகலைவன் மகத மன்னன்
ஜராசந்தனின் உறவினன். தற்போதைய பீகாரே முந்தைய 'மகதம்'. ஜராசந்தனின் இரு பெண்களையும் மணந்தவனே கம்சன். எனவே ஏகலைவனும், கிருஷ்ணரை எதிர்ப்பவனே. 'தன் மகனுக்கு வில்வித்தையை முறையாகக் கற்றுக் கொடுத்தால், அவன் மிகப் பெரிய வில்லாளியாவான்' என நினைத்தார் ஹிரண்யதனுஷ் . எனவே குரு துரோணரிடம் சென்று வில்வித்தையைக் கற்குமாறு அனுப்பி வைத்தார் ஹிரண்யதனுஷ்.
ஏகலைவன், துரோணாச்சாரியாரைச் சந்தித்து,
அவரதுப் பாதங்களில் விழுந்து வணங்கினான். குருவே! நான் ஹிரண்யதனுஷின் மகன் ஏகலைவன், எனக்குத் தாங்கள் குருவாக இருந்து வில்வித்தையைக் கற்றுக்கொடுக்க வேண்டும்! என்றான் ஏகலைவன்.
துரோணருக்கு இக்கட்டான நிலை; அவன் வேடன் குலத்தவன் மட்டுமல்ல, கிருஷ்ணருக்கு விரோதியான ஜராசந்தனின் உறவினன். ஏற்கனவே துரியோதனனின் மனதில் பாண்டவர்களின் மீது வெறுப்பும், பொறாமையும் உருவாகி வருகிறது; இவையெல்லாம் எங்கே சென்று முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. தன்னை ஆதரித்தப் பீஷ்ம பிதாமகர், 'இவ்வரச குமாரர்களின் எதிர்காலம் உங்கள் கைகளில்' எனக் கூறியது அவருக்கு இன்றும் பசுமையாக நினைவில் இருந்தது.
பாண்டவர்களுக்கு எதிராகத் துரியோதனன் எதிர்காலத்தில் இவனை உருவாக்க வாய்ப்புண்டு! எனக் கருதினார் துரோணர். தேவையின்றி நாமே சகோதர உறவுகளுக்கிடையே போட்டியை உருவாக்க வேண்டாம்! நம்மிடம் வில்வித்தையைக் கற்றுவிட்டு, நம்மைக் கௌரவமாக வாழ வைத்த குருவம்சத்திற்கே இவன் பின்னாளில் எதிரியாகவும் மாற வாய்ப்புண்டு! என்றெல்லாம் சிந்தித்தார் துரோணர்.
ஏகலைவா! இது அரச வம்சத்தவர் மட்டுமே பயிலும் இடம்; இங்கே நீ பயில முடியாது; ஆனால் சோர்வடையாமல் வில்வித்தையை நீயே பயிற்சிச் செய்து வந்தாயானால், நீ நிச்சயம் பெரிய வில்லாளன் ஆவாய்! என ஆசி கூறி திருப்பியனுப்பினார் துரோணர்.
ஏகலைவன் (வேடர்) #வேட்டுவர் குலத்தவன் என்பதாலேயே துரோணர் வில்வித்தையைக் கற்றுதரவில்லை! எனக் கூறுவது சரியல்ல. தன்னிடம் படித்து விட்டு அதைக்கொண்டே தன் நாட்டிற்கு எதிராக, இவன் பின்னாளில் உருவாகலாம்! என்ற சந்தேகம் ஒருவரின் மனத்தில் ஏற்படுமானால், அவரால் எப்படி வித்தையைக் கற்றுத் தர முடியும்? 'இளையதாக முள் மரம் கொல்க' என்ற வள்ளுவரின் வாக்கும் இங்கே சிந்திக்கத் தக்கது.
எனவே தேவையற்ற முள்மரமாக இவன் பின்னாளில் உருவாகலாம்! என நினைத்தே துரோணர், ஏகலைவனைத் தவிர்த்தார் எனலாம்.
துரோணர் சீடனாக ஏற்காததால் மனம் வருந்தினாலும், சோர்ந்துவிடவில்லை ஏகலைவன். துரோணரே என் குரு! என மனத்தில் உறுதிகொண்ட ஏகலைவன், துரோணரைப் போலவே ஒரு சிலையை உருவாக்கினான். தன் மானசீகக் குருவின் முன் நின்று தனக்குத் தெரிந்த வில்வித்தையையே தினமும் இடைவிடாது பயிற்சி செய்த ஏகலைவன் ; தனது கடின முயற்சியால் கைதேர்ந்த வில்லாளியயும் ஆனான்.
சரஸ்வதி நதிக்கரையில் அமைந்திருந்தது ஏகலைவனின் நிஷாத அரசு. இவ்வாறிருக்கப் பாண்டவர்களும், கௌரவர்களும் வேட்டையாட காட்டிற்குச் சென்றனர். அப்பொழுது ஒரு நாய் குரைத்துக் கொண்டே வர , எங்கிருந்தோ வந்த சில அம்புகள் நாயின் வாயில் கொத்தாகத் தைத்து நின்றன. இதைக் கண்டு அனைவரும் அதிசயித்து நின்றனர். அதைத் தொடர்ந்து கையில் வில்லம்புகளோடு வந்து நின்றான் ஒரு வேடுவன். நீ யார்? இவ்வித்தையை யாரிடம் கற்றாய்? எனக் கேட்டான் அர்ஜுனன், அவனிடம்.
நான் ஏகலைவன், துரோணரே என் குரு! என்றான் ஏகலைவன். நமக்குத் தெரியாமல் இவனுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார் குரு , என மனம் நொந்தான் அர்ஜுனன். எங்களுக்குக் கூட கற்று தராத வித்தையை ஏகலைவனுக்குக் கற்று தந்துள்ளீர்களே குருவே? என மன வாட்டத்துடன் கேட்டான் அர்ஜுனன். ஏகலைவனுக்கு, தான் கற்று தரவில்லை! என நிரூபிக்க வேண்டிய அவசியம் துரோணருக்கு உருவானது.
தன் சீடர்களை அழைத்துக் கொண்டு ஏகலைவனின் இருப்பிடத்திற்கு வந்தார் துரோணர். அவரை வரவேற்று உபசரித்தான் ஏகலைவன். உனது குரு யார்? நான் , உனக்கு வில்வித்தையைக் கற்று தரவில்லையே? என்று கேட்டார் துரோணர். தங்களது சிலையின் முன் நின்று, தங்களையே குருவாக நினைத்து கடும் பயிற்சி செய்து கற்றுக் கொண்டேன்; எனவே தாங்களே என் குரு! என்றான் ஏகலைவன்.
துரோணர் கற்று தரவில்லை என்றாலும், மானசீகக் குருவையே பெருந்தன்மையோடு குரு! என்றான் ஏகலைவன். அங்கே அவனது விதி விளையாடியது. என்னைக் குருவாக நீ நினைப்பது உண்மையானால் நான் கேட்பதைக் காணிக்கையாகத் தருவாயா? என்றார் துரோணர். நிச்சயமாகத் தருவேன் குருவே! என்றான் ஏகலைவன்.
உனது வலது கையின் கட்டைவிரலை எனக்குக் காணிக்கையாகத் தந்துவிடு! என்றார் துரோணர். சற்றும் தாமதியாமல், தனது வலக்கையின் கட்டைவிரலை வெட்டி துரோணரிடம் கொடுத்தான் ஏகலைவன். அவனது வாக்குத் தவறாமையும், குரு பக்தியும் கண்டு அனைவரும் பிரமித்து நின்றனர்.
தான் விரும்பாதவர்களைச் சீடர்களாக ஏற்காமலிருக்க ஒரு குருவுக்கு அதிகாரம் உண்டு; ஆனால் கற்று தராத வித்தைக்கு விரலையே வெட்டி வாங்கத் துரோணருக்கு உரிமையில்லை; அர்ஜுனனை மகிழ்விக்க இவ்வாறு செய்தார்! என்பதும் சரியில்லை. நமது அனுமதியின்றி நம்மை குருவாக ஏற்றது தவறு; அது முறையற்ற கல்வி! எனத் துரோணர் நினைத்திருக்கலாம். எவ்வாறு பார்க்கையிலும் துரோணர் செய்தது அநியாயமே!
வில்லின் நாணை இழுத்துவிட ஒருவருக்குக் கட்டைவிரலே முக்கியம் ; இருப்பினும் மனம் தளராத ஏகலைவன், கட்டைவிரலின்றியே வில்வித்தையைப் பயிற்சி செய்து வெற்றியும் பெற்றான். ஆனால் முன்னைப் போல சிறப்பாக இல்லை அவனது வில்லாற்றல்.
ஏகலைவன், துரோணருக்குக் காணிக்கையைச் செலுத்திய இடத்தில் அவனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் ஹரியானா மாவட்டத்தில் "கான்ஸா" என்ற கிராமத்தில் இன்றும் உள்ளது.
கிருஷ்ணர், ருக்மணியைக்
கவர்ந்து வந்த போது ஜராசந்தனோடு சேர்ந்து, கிருஷ்ணரை எதிர்த்தான் ஏகலைவன். ஜராசந்தனின் படைத்தலைவனாகவும் இருந்தான் ஏகலைவன்.
கிருஷ்ணரின் மகன் சாம்பன், துரியோதனனின் மகள்
லட்சுமணையைக் கவர்ந்து வந்து மணந்தான். அப்போது துரியோதனின் சார்பாக ஏகலைவனே, #கிருஷ்ணரின் மகனை எதிர்த்தான். துரோணர் நினைத்தப்படியே ஏகலைவனைத் தனது நெருங்கிய நண்பனாக்கிக் கொண்டான் துரியோதனன்.
ஜராசந்தனோடு சேர்ந்து கிருஷ்ணரின் யாதவப் படையை எதிர்த்த ஏகலைவனைப் பின்னர் கிருஷ்ணர் கொன்றார். சுயமாகவே கற்று கைதேர்ந்த வில்லாளியாக விளங்கிய ஏகலைவனை இன்றும் அனைவரும் போற்றுகின்றனர்.
#கர்நாடக அரசு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏகலைவனின் பெயரில் பரிசு வழங்கி வருகிறது.🙏
#கொற்றவை #மைந்தர்களான #வேட்டுவரின் வீரம்
வேட்டுவர் டிவி.